“உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னை: தலைமைச் செயலகத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” ஆகிய திட்டங்களின் செயலாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் முதல்வர், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் உடனடியாக குறிப்பிட்ட கால அளவிற்குள் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து, இதற்காக நன்கு திட்டமிட்டுப் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பாராட்டினார்.
அதேபோன்று, பொதுமக்களின் உடல் நலம் காக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டமும் மிகச் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துறை அலுவலர்களையும் பாராட்டினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், குறிப்பாக, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் திருத்தம் ஆகியவை தொடர்பான மனுக்களில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முடிவான பதில் தரப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதை மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வலியுறுத்தினார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களின் திட்ட ஏற்பாடுகளில் ஒருசில இடங்களில் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் தாமதம், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவை குறித்து தனது கவனத்திற்கு வந்ததாகவும், அதனை சரிசெய்திட வேண்டுமென்று அறிவுறுத்தியதோடு, டோக்கன் வழங்கும் பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்திட அதிக கவுண்டர்களை ஏற்படுத்திட வேண்டும் என்றும், முகாம்கள் நடப்பது குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விளம்பரங்கள் செய்திட வேண்டும் என்றும், முகாம்களில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவு ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இவற்றையெல்லாம், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவனத்தில் கொண்டு, குறைபாடுகள் இல்லாமல் “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்களை நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.