சென்னை விமானநிலையத்தில் இயந்திர கோளாறால் விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்: ஒரு மணி நேர தாமதம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று காலை 68 பயணிகள் உள்பட 73 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோறாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை பொறியாளர்கள் சரிசெய்தபின், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் திருச்சிக்கு புறப்பட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தயார்நிலையில் இருந்தது. பின்னர் 68 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 73 பேருடன் அந்த விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் துவங்கியது.
அப்போது அந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தை விமானி கண்டறிந்தார். இது குறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, திருச்சிக்கு புறப்பட்ட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவலறிந்ததும் இழுவை வண்டிகள் மூலம் அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
பின்னர் பொறியாளர்கள் இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அதுவரை அனைத்து பயணிகளும் விமானத்துக்கு உள்ளேயே அமரவைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர பழுதுகள் ஒரு மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, காலை 6.45 மணியளவில் 68 பயணிகள் உள்பட 73 பேருடன் மீண்டும் புறப்பட்டு சென்றது.