முன்னோடி திட்டம்
இந்தியாவிலேயே முதன்முறையாக, அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தற்போது, இந்த திட்டம் நகர பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், சுமார் 3.05 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை.
பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமின்றி, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர், நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்திற்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1920ம் ஆண்டு முதன்முதலில் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க, சென்னை மாநகராட்சி தலைவராக இருந்த நீதி கட்சி தலைவர் சர்.பிட்டி. தியாகராயர் உத்தரவிட்டார்.
அதன்பிறகு, 1956ல் காமராஜர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார். 1982ல் எம்.ஜி.ஆர். மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகள், கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை உருவாக்கினார். 1989ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 15 நாட்களுக்கு ஒரு முறை, மதிய உணவோடு அவித்த முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
இது, 1998ல் வாரம் ஒரு முறை முட்டையாகவும் 2010ம் ஆண்டு முதல் எல்லா நாட்களிலும் முட்டை வழங்கும் திட்டமாகவும் மாற்றப்பட்டது. ஆரம்ப பள்ளிகளில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆரம்ப பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் கொண்டு வந்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்களின் பணிச்சுமை மற்றும் செலவு குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் காலை உணவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், பெண்களால் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது. குழந்தைகளிடமிருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு நீங்குகிறது. குழந்தைகள், பாடங்களை கவனிப்பது அதிகரிக்கிறது. இது, அவர்களது எதிர்கால கல்விக்கு வெகுவாக பயனளிக்கிறது.
அதனால்தான் இந்த திட்டம், மாணவர்கள் மட்டுமின்றி, தாய்மார்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற திட்டங்களைவிட, இது முன்னோடி திட்டமாக போற்றப்படுகிறது. நீதிக்கட்சி காலத்திலிருந்து இன்றைக்கு வரை மதிய உணவு திட்டம் எப்படியெல்லாம் விரிவடைந்து, சத்துணவு திட்டமாகி, காலை உணவு திட்டம் அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இது, நூற்றாண்டு வரலாற்றை உணர்வுப்பூர்வமாக மனதில் நிலை நிறுத்துகிறது.
