கேரளாவில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல்; முதல்வர் பினராயி விஜயன் சொந்த ஊரில் ஓட்டு போட்டார்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்தநிலையில் 2வது கட்ட தேர்தல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டங்களில் 470 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 9027 வார்டுகளிலும், 77 பிளாக் பஞ்சாயத்துக்களில் உள்ள 1177 வார்டுகளிலும், 7 மாவட்ட பஞ்சாயத்துக்களில் உள்ள 182 வார்டுகளிலும் தேர்தல் நடக்கிறது. அதேபோல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாநகராட்சிகளில் உள்ள 188 வார்டுகளிலும், 47 நகரசபைகளில் உள்ள 1834 வார்டுகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 1.53 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் 80.92 லட்சம் பெண், 72.47 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 38,994 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 20,020 பெண்களும், 18,974 ஆண்களும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே பெரும்பாலான பூத்துகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். இதனால் வாக்குசாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயன் சொந்த ஊரான பினராயி பஞ்சாயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி, உறவினர்களுடன் வந்து வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெறும்.
சபரிமலையில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தது உண்மைதான். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இந்த அரசாக இருந்திருக்காவிட்டால் சபரிமலை விவகாரத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்காது என்று அனைவரும் கருதுகின்றனர். இதனால் தான் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்த அரசை நம்புகின்றனர். நடிகை பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் தான் அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.