தமிழகத்தில் இருந்து கடத்திய மாத்திரை, மருந்துகள் பறிமுதல்
*4 பேர் கைது
ராமேஸ்வரம் : தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட மாத்திரை, மருந்துகளை பறிமுதல் செய்து 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
படகை சோதனையிட்டபோது, அதில் 17 பண்டல்கள் இருந்துள்ளன. பண்டல்களை பிரித்ததில், அதனுள் 4,605 மாத்திரைகள், 15,627 களிம்புகள், 494 மருந்து பாட்டில்கள், 4020 மருந்து பாக்கெட்டுகள் இருந்தன.
இதையெடுத்து படகிலிருந்த புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்து, பறிமுதல் படகுடன் மருந்து மாத்திரைகளுடன் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.