மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தேர்வுகளில் வெயிடேஜ் மதிப்பெண் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை!!
சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு போட்டித் தேர்வுகளில் பணி அனுபவத்தின்படி வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு போட்டித் தேர்வுகளில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.
2 முதல் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்களும், 11 முதல் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களுக்கு 8 சதவீத மதிப்பெண்களும், 16 ஆண்டு மற்றும் அதற்குமேல் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு 10 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் தகுதித் தேர்வுகளான, ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ் தகுதித் தேர்வு, முதல்நிலைத் தேர்வுகளுக்கு பொருந்தாது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.