பிலிப்பைன்சை தாக்கிய பங்-வோங் புயல்; 8 பேர் பலி: 14 லட்சம் பேர் இடம் பெயர்வு
மணிலா, நவ.11: பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாமை கடந்த 7ம் தேதி தாக்கியது. பிலிப்பைன்சின் மத்திய பிராந்தியத்தில் உள்ள தீவுகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 224 பேர் பலியாகினர்.கல்மேகி புயல் தாக்கி ஒருவாரம் கூட ஆகாத நிலையில் பங்- வோங் சூப்பர் புயல் நேற்றுமுன்தினம் இரவு வடமேற்கு பிலிப்பைன்ஸை தாக்கியது. பிலிப்பைன்சின் அரோரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த புயல் தாக்கியது. அதிக மக்கள் தொகை கொண்ட லுஸோன் தீவில் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகம்வரை காற்று வீசியது.
இந்த புயல் காரணமாக கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது.அந்த மாகாணம் முழுவதும் மின்சாரம் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் காரணமாக பல விமான நிலையங்கள் மூடப்பட்டன. 3 60க்கும் மேலான சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 8 பேர் பலியாகினர். 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவசர கால தங்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.