பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 188 பேர் உயிரிழப்பு : அவசரநிலை பிரகடனம்
மணிலா: மத்திய பிலிப்பைன்சில் வீசிய கல்மேகி புயலுக்கு 188 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 127 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின. இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆற்றங்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பிலிப்பைன்ஸ் இந்த ஆண்டு எதிர்கொண்ட பேரிடர்களில் மிக மோசமான பேரிடராக இது கருதப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் மத்திய பிராந்தியத்தில் கல்மேகி புயலுக்கு 188 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். 127 பேரை காணவில்லை.கல்மேகி புயலால் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 4,50,000 பேர் உட்பட 5,60,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நேற்று அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவசர நிதியை அரசு விரைவாக வழங்கவும், உணவுப் பதுக்கல், அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை தடுக்கவும் இது உதவும் என கூறப்படுகிறது.