7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் அதிரடி கைது: சிறையில் இருந்து வந்தவர் சுற்றிவளைப்பு
நெல்லை: நெல்லை தச்சநல்லூர் எஸ்ஐ மகேந்திரகுமார் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் 11ம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊருடையார்புரம் பகுதியில் ஒரு கும்பலை விசாரித்தனர். அக்கும்பல் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹரிஹரன், அருண்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து அருண்குமாரின் தம்பி அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தச்சநல்லூர் போலீஸ் நிலையம் அருகே, புதுக்குளம் விநாயகர் கோவில், சுப்புராஜ் மில் செக்போஸ்ட், தென்கலம் அணுகுசாலை சந்திப்பு, சங்கர் நகர் வங்கி, கரையிருப்பு விலக்கு உள்ளிட்ட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக அஜித்குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களின் பின்னணியில் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவரான தச்சநல்லூர் கண்ணபிரான் இருப்பதாக கூறி அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், திருச்சி போலீசார் கைது செய்த வழக்கில் கடலூர் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த கண்ணபிரானை நெல்லை தனிப்படை போலீசார், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.