பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
டெல்லி : பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் எத்தனால் கலப்பு திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின் பாதிக்கப்படுகிறது. எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷதன் பராசத் தனது வாதங்களை முன் வைத்தார். அதில், “எத்தனால் கலப்பால் 6 சதவீதம் மைலேஜ் குறைவதாக 2021ல் நிதி ஆயோக் தனது கவலை தெரிவித்தது. குறிப்பாக 2023க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இந்த E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.
எனவே வாகன ஓட்டிகளுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று கூறினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி, ''அனைத்து விஷயங்களை கருத்தில் கொண்டு தான் அரசு பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் முடிவை எடுத்தது. இந்த முடிவு கரும்பு, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு பெரிதும் பலன் அளிக்கும்'' என வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.