பெருங்குடி குப்பைக்கிடங்கில் தீ: 3 மணிநேரம் போராடி அணைப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை, லாரிகள் மூலம் கொண்டு வந்து பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு குப்பை தரம் பிடிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு, நேற்று மாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றி அப்பகுதி முழுவதும் பரவியது.
காற்றின் வேகம் காரணமாக, கரும்புகை வெளியேறி ரேடியல் சாலை வரை பரவியதால், வாகன ஒட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்பட்டது. தகவலறிந்து துரைப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, வேளச்சேரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
குப்பை குவியலில் தீ பரவியால் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மாநகராட்சி தெற்கு துணை கமிஷனர் அதாப் ரசூல், பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் சுரேஷ் குமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர். குப்பை குவியலில் தென்னை ஓலைகள் மற்றும் காலி பாட்டில்கள் கிடந்ததாகவும், அதிக வெப்பத்தால் பாட்டில் வெப்பத்தில் ஓலைகளில் தீப்பற்றி தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.