பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழம் அறுவடை தொடங்கியாச்சு...விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழம் அறுவடை சீசன் தொடங்கிய நிலையில், விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை மலைப்பகுதியில் தாண்டிக்குடி, மஞ்சள்ப்பரப்பு, கொங்கப்பட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களங்கொம்பு, கும்பம்மாள்பட்டி உள்ளிட்ட கீழ் பழனிமலைப் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாரம்பரியமாக காபி சாகுபடி நடந்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை 4.5 லட்சம் ஏக்கரில் காபி சாகுபடி நடந்து வருகிறது. தமிழகம் காபி சாகுபடியில் 3ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அரபிக்கா, ரப்போஸ்டா என்னும் இருவகை காபி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், அரபிகா செடி வகையாகும். ரப்போஸ்டா மர வகையாகும். காபி செடிகள் நட்டபின் 4 ஆண்டில் பலன் தரத்தொடங்கும். அக்டோபரில் பழங்கள் பழுத்து, ஜனவரியில் அறுவடை சீசன் நிறைவடையும்.
இந்தாண்டு காபி செடிகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை, நல்ல மழை, தாண்டிக்குடி காபி வாரியத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கை ஆகிய காரணங்களால் விவசாயிகள் அதிகளவில் காபி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பாறை மலைப்பகுதியில் காபி பழங்களை செடியிலிருந்து பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பறிக்கப்பட்ட காபி பழங்களை வெயிலில் உலர வைத்து, இயந்திரங்கள் மூலம் பழங்களில் உள்ள வெளித்தோல் நீக்கப்படுகிறது. பின்னர் கழுவி சுத்தம் செய்கின்றனர்.
இவ்வாறு சுத்தம் செய்து காபி தளர்களை காபி கொட்டைகளாக மாற்றுவதற்காக மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். பிரேசில், வியட்நாம் நாடுகளில் சீதோஷ்ண நிலை பாதிப்பால், அந்த நாடுகளில் காபி விளைச்சல் பாதிகப்பட்டுள்ளது. இதனால், இந்திய காபிக்கு உள்நாடு, வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. இதனால், காபி சீசன் தொடங்கிய நிலையில் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இங்கு விளையும் காபியில் நறுமணம், கூடுதல் சுவை இருப்பதால், அதிக மவுசு உள்ளது. விலை அதிகரிப்பால் காபி விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.