பெர்த் மைதானத்தில் நாளை முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகள் நடக்கிறது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடக்கிறது. புதுகேப்டன் சுப்மன் கில் தலைமையில் 38 வயது ரோகித் சர்மா, 36 வயது விராட் கோஹ்லி 8 மாதத்திற்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குவதோடு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக களம் இறங்குகிறார். அக்சர்பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா அல்லது பிரசித் கிருஷ்ணா ஆடும் லெவனில் இடம்பெறக்கூடும். சுழல் பணியை குல்தீப் மேற்கொள்வார் என தெரிகிறது. நம்பர் 1 அணியான இந்தியா இளம் கேப்டன் கில் தலைமையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மறுபுறம் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் பேட்டிங்கில் சாதிக்க காத்திருக்கின்றனர். ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் காயத்தால் விலகியதால் அவரது இடத்தில் மார்னஸ் லாபுசாக்னே சேர்க்கப்பட்டுள்ளார். பவுலிங்கில் ஸ்டார்க், ஹேசல்வுட், நாதன் எல்லிஸ் ஆகியோர் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். ஆடம் ஜாம்பா, அலெக்ஸ் கேரி, ஜோஸ் இல்லிங்ஸ் முதல் போட்டியில் விலகியது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாகும். இருப்பினும் சொந்த நாட்டில் ஆடுவது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமாகும்.
இரு அணிகளும் தொட ரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பகலிரவு போட்டியான நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டியை நேரடியாக காணலாம். இந்திய உத்தேச அணி: சுப்மன் கில் (கே), ரோகித் சர்மா, கோஹ்லி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் (வி.கீ), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். ஆஸி.அணி: மிட்சல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேட்ஷார்ட், மேத்யூ ரென்ஷா, ஜோஷ் பிலிப் (விகீ), ஓவன், கூப்பர் கோனோலி, ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஹேசில்வுட், மேத்யூ குஹ்னெமன்.