திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும்: கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல்
மதுரை: திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டம் என்பவர் தாக்கல் செய்த மனுவில்; திருச்செந்தூர் முருகன் கோவிலின் மூலவர் சன்னதிக்கு பின்புறம் பஞ்சலிங்கம் உளது. கொரோனா தொற்றுக்கு பிறகு பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது. பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் குறைவாக இருந்தால் தரிசிக்க அனுமதிக்கப்படுவர். கூட்டம் அதிகமாக இருந்தால் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தைப் பொறுத்து அனுமதி தர நடவடிக்கை எடுக்க கூறிய நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்தது.