கட்டணம் வசூலிக்கும் கருவி பழுதானால் டோல்கேட்டில் இலவசமாக பயணிக்க அனுமதி: நவம்பர் 15ம் தேதி முதல் அமல்
புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கருவிகள் பழுதடைந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம், ஃபாஸ்டேக் அபராதமும் குறைப்பு என வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நிவாரணங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பயன்பாட்டை ஒன்றிய அரசு தீவிரமாக ஊக்குவித்ததன் விளைவாக, தற்போது அதன் பயன்பாடு 98 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் பெருமளவில் குறைந்துள்ளது. இருப்பினும், ஃபாஸ்டேக் இல்லாத அல்லது அது முறையாக செயல்படாத வாகனங்களிடமிருந்து இரட்டிப்புக் கட்டணம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, தவறான ஃபாஸ்டேக் கட்டணப் பிடித்தம் செய்யும் சுங்கச்சாவடி முகமைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதுபோன்ற தவறுகள் 70 சதவீதம் குறைந்தன.
இந்தச் சூழலில், வாகன ஓட்டிகளின் சுமையைக் குறைக்கும் வகையிலும், சுங்கச்சாவடி முகமைகளின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, செல்லுபடியாகாத ஃபாஸ்டேக் கொண்ட வாகனங்கள், யுபிஐ போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தினால், சாதாரண சுங்கக் கட்டணத்தை விட 1.25 மடங்கு மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும். இது தற்போதைய இரட்டிப்புக் கட்டண அபராதத்தை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்.
மேலும், சுங்கச்சாவடியில் உள்ள மின்னணு கட்டண வசூல் கருவி பழுதடைந்து செயல்படாத நிலையில், செல்லத்தக்க மற்றும் செயல்படும் ஃபாஸ்டேக் கொண்ட வாகனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படும். சுங்கச்சாவடி நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறுக்காக வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.