வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுருளி அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப கோயில் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்த அருவியின் நீப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, தூவானம், அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் கடந்த நவ.30 மற்றும் டிச.1ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், வெளியூர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், இன்று காலை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால், 2 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.