அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: விஜய் அறிக்கை
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோரை சந்திக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தவெக நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம்.
இந்த சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லாவகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொலி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.
அனுமதி கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்போம். இதனிடையே நாம் ஏற்கனவே (28.9.2025) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாக தவெக சார்பில் 18ம் தேதி அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக்கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்த கடினமான தருணத்தை கடந்து வருவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.