கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு செல்ல மீண்டும் அனுமதி: பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக சுற்றுலா இடங்களுக்கு செல்ல இரண்டு நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மழை குறைந்ததால் இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரபலமான பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களும், பேரிஜம் ஏரி வனப்பகுதியும் நேற்று முன்தினம் மூடப்பட்டது.
தொடர்ந்து விடுமுறை நாளான நேற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி நட்சத்திர ஏரியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம்களில் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படகு குழாம் சுற்றுலாப்பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை காற்றின் வேகமும், மழையும் குறைந்ததால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இன்று கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்தனர்.
மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் நேற்று பெய்த மழையால் முக்கிய மலைச் சாலையான கோஷன் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இப்பகுதி பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்லக்கூடிய பிரதான மலைச் சாலையாகும். இதனால் வாகனங்கள் இருபுறமும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.