ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் திறப்பு தமிழர்களுக்கு பெருமை: முத்தரசன் பாராட்டு
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக ஆதிக்க சக்திகளின் சதிச்செயலை எடுத்து கூறி, சமூக சீர்திருத்த புரட்சியை முன்னெடுத்த பெரியோர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் பெரியார். அவர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் இன்று உலகளாவிய சமூகநீதி போராளிகளுக்கு கருத்தாயுதமாக பயன்பட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற தொன்மைவாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பேரறிஞர் பெருமக்களை போற்றி பாராட்டி வந்திருக்கிறது.
இந்த வரிசையில் நேற்று முன்தினம் பெரியார் உருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பெரியாரின் சிறப்புகளை எடுத்து கூறியிருப்பது பொருத்தமானது, வரவேற்கத்தக்கது. இந்த நிகழ்வில் சுயமரியாதை இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த பங்களிப்பு தொடர்பான 2 ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமையளிக்கும் நிகழ்வுக்கும், இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.