பெரியார் ஏற்றிய கொள்கைப் பெருநெருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏந்தி தன் லட்சிய பயணத்தை தொடர்கிறார்: வீடியோ வெளியிட்டு திமுக பெருமிதம்
சென்னை: பெரியார் ஏற்றிய கொள்கைப் பெருநெருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏந்தி தன் லட்சிய பயணத்தை தொடர்கிறார் என்று திமுக கூறியுள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பதிவில் பெரியார் பேசிய வீடியோவை வெளியிட்டு வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சமூகத்தில் இருந்த உயர்வு தாழ்வு, மேடு பள்ளங்களை சமன் செய்ய தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. பெரியார் ஏற்றிய கொள்கைப் பெருநெருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏந்தி தன் இலட்சிய பயணத்தை தொடர்கிறார்” என்று பதிவிட்டுள்ளது.அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது: சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும்.
அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளிப்படும்” என்று பெரியார் சொன்னார். பெரியார் கண்ட வளர்ச்சியை நாங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். பெரியாருக்கே இந்த ஆட்சி காணிக்கை என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. தமிழர் தந்தை பெரியார் மறைந்தபோது, அரசு மரியாதைக்கு ஆணை பிறப்பித்தார் தமிழின தலைவர் கலைஞர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து, செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டையே உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.