பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு பேருந்து சேவை வேண்டும்: பேரவையில் தாயகம் கவி எம்எல்ஏ கோரிக்கை
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி (திமுக) பேசியதாவது: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து ரெட்டேரி வழியாக பெரியபாளையம் கோயில் வரை, பெரம்பூரிலிருந்து சோழிங்கநல்லூர் வரை, பெரம்பூரிலிருந்து திருவொற்றியூர்-எண்ணூர் வழியாக பொன்னேரி வரை,
பெரம்பூரிலிருந்து சாந்தோம் கடற்கரை-மெரினா கடற்கரை-எலியட்ஸ் கடற்கரை வழியாக ஈச்சங்காடு-கோவளம் வரை, பெரம்பூரிலிருந்து அரும்பாக்கம், பெரம்பூரிலிருந்து அம்பத்தூர்-ஆவடி-ஈச்சங்காடு-பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூர் வரை, பெரம்பூரிலிருந்து திருமங்கலம் புறநகர்சாலை வழியாக பெருங்களத்தூர்- கூடுவாஞ்சேரி- மறைமலை நகர்- மகிந்திரா சிட்டி வழியாக செங்கல்பட்டு வரை புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும். பெரம்பூரிலிருந்து எழும்பூர்-அண்ணா சாலை வழியாக அண்ணா சதுக்கம் செல்கின்ற 29ஏ என்ற பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து இயக்க வேண்டும்,’ என்றார்.
சபாநாயகர்: பெரம்பூரில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பேருந்து இயக்க வேண்டுமென்று கேட்கிறார்.
தாயகம் கவி: பெரம்பூரிலிருந்து கீழ்ப்பாக்கம் கார்டன்-பச்சையப்பன் கல்லூரி-அரும்பாக்கம்-மதுரவாயல் வழியாக திருவேற்காடு வரை செல்கின்ற 29இ என்ற பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து தர வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: அங்கிருந்து ராதாபுரத்திற்கும் ஒரு பேருந்து கேட்டிருக்கலாம்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: உறுப்பினர் தாயகம் கவி கோயிலுக்கு செல்வதற்கு பெரியபாளையம், வேலைக்கு செல்வதற்கு சோழிங்கநல்லூர், சுற்றுலா செல்வதற்கு பீச் என்று எல்லாவற்றையும் சேர்த்து கேட்டிருக்கிறார். நகர பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் அளவுதான் இயக்க முடியும். எனவே, அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பழைய பேருந்துகள் எல்லாம் மாற்றப்படுகின்றன. அதன்படி இவையும் மாற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.