பெரம்பூரில் பிரபல கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி
பெரம்பூர்: பெரம்பூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் கரப்பான்பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல பிரியாணி கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் பெரம்பூர் முனியப்ப செட்டி தெரு பகுதியை சேர்ந்த யுகேந்திரபாபு (30) என்பவர் மட்டன் பிரியாணிவாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளார்.
அப்போது அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்துகிடந்தது பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பிரியாணி கடைக்கு சென்று கேட்டபோதுஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனிடையே யுகேந்திரபாபுவுக்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து யுகேந்திரபாபு கொடுத்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.