4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளியை சூறையாடிய மக்கள்: ஹெச்.எம் உள்பட 5 பேர் கைது: மணப்பாறையில் பரபரப்பு
இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்து நொறுக்கியதோடு காரை கவிழ்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எஸ்பி செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வசந்த குமார், இவரது மனைவி சுதா, வசந்த குமாரின் மாமனார் மாராசி மற்றும் செழியன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எஸ்.பி செல்வநாகரத்தினம் அளித்த பேட்டி: மாணவி பாலியல் சீண்டல் வழக்கு சம்மந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதுபோன்று மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோல், வேறு ஏதேனும் குற்றட்சாட்டுகள் உள்ளதா என விசாரணையில் தெரியவரும் என்றார். மக்கள் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான பள்ளி தலைமையாசிரியை ஜெயலெட்சுமி இன்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இன்று சம்பந்தப்பட்ட பள்ளி மூடப்பட்டுள்ளது.