திக்கி… திணறும் மக்கள்
பசுமை நகரம், குளிர் நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூரு மெல்ல மெல்ல காற்று மாசு, தூசு நகரம் என்று பெயர் பெற்று வருகிறது. இதற்கு காரணம் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தான். ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெங்களூருவில் முதலீடு செய்துள்ளதால் நாளுக்கு நாள் இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெங்களூருவுக்கு வந்து தங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு வசதியாக அடுத்த 3 ஆண்டுகளில் 2 கோடி மக்கள் வசிக்க தகுதியான நகரமாக பெங்களூருவை வடிவமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் நிர்வாக வசதிக்காக பெங்களூருவை 5 மாநகராட்சியாக பிரித்து கிரேட்டர் பெங்களூரு என்று பெயர் சூட்டியுள்ளனர். மக்கள் தொகை பெருகுவது போல் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு தகுந்த சாலை வசதிகள் நகரத்தில் இல்லை. எனவே சாலைகளை அகலப்படுத்த மரங்கள் வெட்டப்படுகின்றன. மழைநீர் வடிகால், கழிவு நீர் வடிகால்களை புனரமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ஆங்காங்கே குழிதோண்டப்பட்டுள்ளன.
இது தவிர மெட்ரோ பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதால் 5 நிமிடத்தில் நடைபயணமாக கடந்து விடும் சாலையை வாகனங்களில் கடக்க அரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரு புறம் போக்குவரத்து நெரிசல், மறுபுறம் மாசு, தூசு ஆகியவற்றால் மக்கள் திக்கி, திணறி வருகின்றனர். பொது விடுமுறை நாட்களில் மக்கள் அனைவரும் வெளியேறி விட்டால் பெங்களூரு நகரம் காலியாக காணப்படுகிறது. அப்போது
20 ஆண்டுக்கு முன்பு பரபரப்பு இல்லாமல் இருந்த நகரத்தை பார்க்க முடிகிறது.
சாலை பணிகள் உள்பட அடிப்படை பணிகள் நடப்பதால் மழை இடைவிடாது பெய்தால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் நெரிசலை சாதாரணமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் மாநகரில் குவியும் குப்பையும் அதிகரித்துவிட்டது. சாலைகளின் அனைத்து ஓரங்களிலும் அகற்றப்படாத குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் கழிவுநீர் கால்வாயில் இருந்து தூர்வாரப்பட்ட சேறு சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெங்களூரு வடக்கு பகுதியில் ஒரே இரவில் மாநகராட்சி ஊழியர்கள் களம் இறங்கி 98 டன் கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளனர். 7.1 கிமீ தூரம் வரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் 16 ஆட்டோ டிப்பர், 16 டிராக்டர் உள்பட பல கருவிகளை பயன்படுத்தி 28 டன் சேறு, 18 டன் குப்பை, முறிந்த மர கிளைகள் உள்பட 98 டன் குப்பை கழிவுகளை அகற்றியுள்ளனர். பெங்களூரு புறநகர் பகுதிகளில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக வளர்ச்சி கண்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
ஒசூர் சாலையில் மஞ்சள் வழித்தட மெட்ரோ ெதாடங்கப்பட்டதால் 30 சதவீத ேபாக்குவரத்து நெரிசல் குறைந்ததாக சர்வே தெரியப்படுத்தினாலும், அப்படி எதுவும் குறைந்ததாக தெரியவில்லை என்பதை பயணிக்கும் போது உணரமுடிகிறது. எனவே இப்ேபாது வசிக்கும் மக்களையும், எதிர்காலத்தில் வருபவர்களையும் அரவணைத்து கொள்ளும் அளவுக்கு பெங்களூரு மாநகரில் சாைல உள்பட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.