மக்கள் ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்குப்பதிவது அடிப்படை உரிமைமீறல்: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி அதிரடி கருத்து ஒன்றிய அரசை எதிர்த்தவர்கள் மீதான வழக்கு ரத்து
மதுரை: ஒன்றிய அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் கிளை, அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த, மக்கள் ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்குப்பதிவது அடிப்படை உரிமைமீறல் என கருத்து தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஷாஜிதா, பாத்திமா உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022, அக்டோபர் மாதம் ஒன்றிய அரசுக்கு எதிராக அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்து இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்திற்கோ அல்லது பொது மக்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் விஏஓ அளித்த புகாரின்பேரில் 304 பேர் மீது அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், அரசின் மீது ஏற்படும் அதிருப்தியை வெளிப்படுத்த, நாட்டின் குடிமக்கள் ஒன்று கூடுவதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவ்வாறு கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்து அதற்காக இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதை அனுமதித்தால், எந்த குடிமகனும் இனி ஜனநாயக முறையில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்தபோது, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கான குற்றம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது. ஏனெனில் எந்த ஒரு போராட்டமும் போக்குவரத்திற்கு குறைந்தபட்ச அளவிலாவது இடையூறை ஏற்படுத்துவது இயல்பு. ஆனால் அது ‘சட்ட விரோத இடையூறை ஏற்படுத்தியது’ என குற்றம் சாட்டப்படுவதற்கு ஏற்கத்தக்கதல்ல என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளில் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.