மணலி புதுநகரில் மழைநீர் தேக்கம்: நாற்காலியில் அமர்ந்து மக்கள் மறியல்
திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகர் 16 வார்டில் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டப் பணி முடிவடைந்து, குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் காங்கிரீட் அமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணியை கான்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்ததாரர் பணிகளை உடனடியாக மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக பல தெருக்கள் குண்டும் குழியுமாக பொதுமக்கள் நடந்த செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த 270வது பிளாக் 90வது தெரு குண்டும் குழியுமாகி மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ‘’பழுதடைந்த சாலையை சீரமைக்கவேண்டும்’ என்று வலியுறுத்தி சாலையில் நாற்காலிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’ தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளதால் மழைநீர் தேங்கி அவதிப்படுகிறோம். நடந்துக்கூட செல்ல முடியவில்லை. எனவே, சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றனர்.