மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; உரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நடந்த உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளில், புதிய மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் 3,631 மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளை வருக, வருக என்று வரவேற்கிறேன். இப்போது நகர்ப்புறத்தில், 9 மாவட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமித்திருக்கிறோம். அடுத்து, மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் அமையும்போது இன்னும் 9 ஆயிரத்திற்கும் மேல் அதிகாரம் பெற இருக்கிறீர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவர்களின் ‘உரிமை’ என்பதை உணர்ந்து இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
* மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு காண அரசு துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 4 விழுக்காடு இடஒதுக்கீடு முறையில் வாய்ப்புகள் வழங்க உத்தரவிட்டிருக்கிறோம்.
* தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திக்கொண்டே வருகிறோம். 2021-22ம் நிதியாண்டில், ரூ.813 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்தோம். 2025-26ம் நிதியாண்டில் ரூ.1,432 கோடியே 77 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம்.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மட்டுமே இதுவரை 60க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்திருக்கிறோம்.
* மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி, 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி எத்தனையோ திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தக்கூடிய அரசு தான் உங்களுடைய திராவிட மாடல் அரசு என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்.
இந்த வரிசையில்தான் மாற்றுத்திறனாளிகளின் அரசியல், சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் முக்கியமான ஒரு சட்டத்தை கொண்டு வந்தோம். ஊராட்சி அமைப்புகள் - ஒன்றிய அமைப்புகள் - மாவட்ட அமைப்புகளில் இன்றைக்கு நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதன் மூலமாக, சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான பொருளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இனிமேல், நீங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவுசெய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள். மனுக்களை அளிக்க போகிறவர்கள் இல்லை நீங்கள்; மனுக்களை பெற்று தீர்வுகாண போகின்றவர்கள் நீங்கள்.
மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் ஆற்றப்போகும் பணிகளைப் பார்த்து, இதை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும். இதுதான், உண்மையான சமத்துவத்தையும் - சமூகநீதியையும் நோக்கிய பயணமாக இருக்கும். உங்கள் பணி சிறக்க - வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி.ராஜா, மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள் எழிலன், பரந்தாமன், தலைமை செயலாளர் முருகானந்தம், அரசு செயலாளர்கள் ககன்தீப் சிங் பேடி, கார்த்திகேயன், மதுமதி, ஆணையர்கள் லட்சுமி, சுதன் மற்றும் ரோகினி, அமர் சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கர ராமன், மாற்றுத்திறனாளிகள் நல ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* கலைஞரை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்
கலைஞரையே நீங்கள் ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். கலைஞர் ஒரு முறை ஒரு விபத்தை எதிர்கொண்டார். அதனால், அவரது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், அந்த வலியைக்கூட பொறுத்துக்கொண்டு, இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார். ஏராளமான இலக்கிய படைப்புகள் - உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் - தமிழ்நாட்டு வரலாற்றை திருத்தி எழுதிய அறிக்கைகள் - திட்டங்களை - அவரால் கொடுக்க முடிந்தது. கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவர் மனதை பாதிக்கவில்லை. கலைஞர் முதுமைக் காலத்தில், சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே, எப்படி பம்பரமாக சுழன்று, சுழன்று உழைத்தார் என்று உங்களுக்கு தெரியும். இந்த ‘வில் பவர்’தான் அரசியலுக்கு அவசியம். மனிதர்களுக்கு அவசியம். அதை நீங்கள் எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
* 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.12 கோடியில் நலத்திட்ட உதவிகள்
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025ஐ முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலியாகவும் 3 சக்கரம் வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறந்த முறையில் சேவைபுரிந்த ஆசிரியர்கள், சமூக பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விருதுகளை வழங்கி சிறப்பித்ததோடு, விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகை செய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 16.4.2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.