தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூரில் நடந்த மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக அனைத்து குறியீடுகளிலும் நம்பர்-1 மாநிலமாக திகழ்கிறது. இதற்கு அடித்தளமாக திராவிட மாடல் ஆட்சியின் சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சி மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை அமைந்திருக்கிறது.

Advertisement

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத அவர்கள், இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற திராவிட மாடல் மீது, அவதூறுகளை பரப்புகிறார்கள். அவர்களையெல்லாம் புறந்தள்ளி, எங்களுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

அடுத்தபடியாக, கூட்டாட்சி முறை வலுப்பெற வேண்டும்; மாநில உரிமை காக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏன் தொடர்ந்து கூட்டாட்சிக்காக பேசுகிறோம் என்றால், வளமான இந்தியா, வலிமையான இந்தியாவும் உருவாக வேண்டும் என்றால், மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநிலங்கள் தங்களுடைய வளர்ச்சி பாதையை தாங்களே வகுக்க வேண்டும். குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவம் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும். இந்தியா என்பது ஒரு துணைக் கண்டம்.

அதனால், நாடு முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை சரியானதாக இருக்காது. இருமொழிக் கொள்கையை உறுதியாக பின்பற்றி வருகின்ற நாங்கள், தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகின்ற மும்மொழிக் கொள்கையை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்காக, நியாயமாக எங்களுக்கு வர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜ அரசு தர மறுக்கிறார்கள். மற்ற நிதி ஒதுக்கீட்டிலும், தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை காட்டுகிறார்கள். தமிழ்நாடு அரசு தன்னுடைய உரிமைகள் ஒவ்வொன்றையும், தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் மூலமாகதான் நிலைநாட்டி வருகிறது. நியமன ஆளுநரின் முட்டுக்கட்டைகள், ஒன்றிய அரசின் தடைக் கற்கள் என்று பல வரலாம். ஆனாலும், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்!

எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள். ஆனால், எந்த வகையிலும் திராவிட மாடல் அடிப்படையிலான தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. அதனால்தான், இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிக்காட்டிய ஒரே மாநிலமாக திராவிட மாடல் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறது. எங்களுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்த இலக்கை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறேன், திராவிட மாடல் 2.0-ல் அதையும் சாதித்து காட்டுவோம். எங்களுடைய Roadmap தெளிவாக இருக்கிறது. அதனால்தான், தொழில் வளர்ச்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வருகிறது.

இன்றைக்கு கோயம்புத்தூர், தென்னிந்தியாவின் மான்செஸ்டராக இந்த வளர்ச்சியின் முக்கிய மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. தொலைநோக்கு பார்வையுடன், தமிழ்நாட்டிற்கான எதிர்காலத்தை வலிமையாக கட்டமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குகிறோம். இளைஞர்களை Upskill செய்கின்ற ‘நான் முதல்வன் திறன் மேம்பாட்டு திட்டம்’, ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில், கல்வி பயில வாய்ப்பு உருவாகியிருக்கின்ற திறனறி தேர்வுத் திட்டம்.

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க, மாதம் ரூ.1000 வழங்குகின்ற புதுமைப் பெண் திட்டம். அதேபோல, மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டம் என்று நாங்கள் உருவாக்கியிருக்கின்ற திட்டங்கள் எல்லாம் அதனுடைய நோக்கத்தில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும், கல்விக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது. ஏனென்றால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் நாங்கள். கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. இன்றைக்கும் கல்விக்கு எப்படிப்பட்ட இடர்கள் உருவாக்கப்படுகிறது என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். நான் உறுதியாக சொல்கிறேன், யார் - எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், கல்வியில் எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.

அதேபோல, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலினச் சமத்துவத்தை நோக்கியும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். மகளிர் உயர மாநிலம் உயரும். அதற்காக, ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் ரூ.1000 பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், 528 கோடி முறை கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொண்டிருக்கின்ற விடியல் பயணம் திட்டம் போன்றவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திற்கான வலிமையான கட்டமைப்புகளை உருவாக்கி, மக்களுடைய தேவைகளை உணர்ந்து, அதற்கான திட்டங்களை உருவாக்குவதுடன், அந்த திட்டங்கள் எளிமையாக மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்வதுதான் நல்லரசுக்கான இலக்கணம்.

அந்த வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம், 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை, 5,691 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதில், 46 அரசு துறை சேவைகளை வழங்குகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி, அவர்கள் குரல் ஒலிப்பதை உறுதி செய்திருக்கிறோம். இப்படி, மக்களுக்கான தேவைகள் என்னவென்று பார்த்து, பார்த்து செய்வதால்தான், பலரும் நம்முடைய திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கான வழிகாட்டியாக சொல்கிறார்கள். யூடியூப்-ல் பல வடஇந்திய சேனல்களும், திராவிட மாடலின் செயல்பாடுகளை தங்களுடைய மாநில மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

நேற்றுகூட, ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன், மன்னார் வளைகுடாவில் இருக்கின்ற கரியாச்சல்லி தீவை காப்பாற்ற திராவிட மாடல் அரசு எடுத்து வருகின்ற முயற்சிகளை பற்றி சொல்லியிருக்கார். இப்படி, யாரையும் புறக்கணிக்காத, திட்டமிட்ட வளர்ச்சி பாதையில் செல்லும் தமிழ்நாட்டின் பயணம், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, ஒவ்வொரு பெண்ணுக்கும் மேம்பாடு, ஒடுக்கப்பட்டவருக்கு உயர்வு என்பதை உறுதி செய்கிறது. உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடு, உலக அளவில் தலை சிறந்த மாநிலமாக, தமிழ்நாட்டை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வோம் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மக்களுக்கான தேவைகள் என்னவென்று பார்த்து, பார்த்து செய்வதால்தான், பலரும் நம்முடைய திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கான வழிகாட்டியாக சொல்கிறார்கள். யூடியூப்-ல் பல வடஇந்திய சேனல்களும், திராவிட மாடலின் செயல்பாடுகளை தங்களுடைய மாநில மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

Advertisement