தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதா? பிரதமர் மோடிக்கு தலைவர்கள் கண்டனம்: தேர்தல் அரசியலுக்காக பொய்யைப் பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, சண்முகம், வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை: பீகார் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, சண்முகம், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எங்கு சென்றாலும் தமிழர்களின் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு, நாட்டின் நலன் மீது கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் அறிவுரை கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழில் வணக்கம் என்று பேசுவதும், திருக்குறள் சொல்வதும், தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிப்பதாக பொதுக்கூட்டங்களில் பேசுவதும் வாடிக்கை. ஆனால், தமிழகத்திற்கான எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பார். உதாரணமாக, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, கல்விக்கான நிதி, 100 நாள் வேலை திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை என பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படாமல் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. ஆனாலும், தமிழக அரசு நிதியை வைத்தே இந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில்தான் தற்போது பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் துன்பம் இழைப்பதாக ஒரு பொய்யான செய்தியை கூறி தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் இப்படி குறை கூறி மக்களை திசை திருப்பும் போக்கு இப்போது மட்டுமல்ல பாஜகவினரால் முன்பே பலமுறை கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நவீன்பட்நாயக் நம்பிக்கையை பெற்று அவருடைய தனிச் செயலாளராக பணியாற்றியவர் தமிழ்நாட்டை சேர்ந்த பி.கே.பாண்டியன். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது பிரசாரம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பூரி ஜெகந்நாதர் கோயில் ஆலயக் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று கூறியதுடன், ஒடிசாவை தமிழர்கள் ஆள்வதா என தமிழர்களை திருடர்கள் போல் கேவலப்படுத்தி ஒரு பொய்யான வதந்தியை கிளப்பிவிட்டவர்கள் தான் பாஜ தலைவர்கள்.

தமிழ்நாடு முழுவதிலும் பல லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வந்து தங்கி கூலி வேலைகள் செய்து மாதந்தோறும் பல கோடி ரூபாயை வடமாநிலங்களில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு அனுப்பிக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வருவதை இன்றும் காணலாம். 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில மக்கள் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு பயணம் செய்யப் புறப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதை மையப்படுத்தி வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்கிவிட்டார்கள். அதனால் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள் என்று அபாண்டமான ஒரு பொய்ச் செய்திகளை பரப்பினார்கள். செய்தி வெளிவந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக தலையிட்டு பிரச்சினை உண்மையா என்பதை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் உண்மை இல்லை, இது வடமாநிலத்தை சேர்ந்த பாஜ நிர்வாகிகளின் சதி வேலை என்பது அப்பட்டமாக தெரியவந்தது.

இப்படி, தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள், குறிப்பாக பீகாரிகள் தாக்கப்படுவதாகவும் அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இங்கு வாழ்வதாகவும் அடிப்படையற்ற வதந்திகளை மனிஷ் காஷ்யப் எனும் யூடியூபர் பரப்பியதால், அவர் கைது செய்யப்பட்டார். பீகார் தேர்தல் பிரசாரத்தில் தேவையில்லாமல் தமிழர்களை வம்புக்கு இழுத்து பிரதமர் பேசியுள்ளார். இது ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருப்பவர் பின்பற்றும் நடைமுறையா? இது வருந்தத்தக்கது என்று தமிழக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பாஜ சொல்லும் பாதக மொழிகளை, பிரித்தாளும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா ஏற்காது. இதுபோன்ற பிரதமர் மோடியின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜவினர் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): உச்சபட்ச பதவியில் இருக்கும் பிரதமர் மோடியின் பேச்சு வேதனையை அளிக்கிறது, கண்டனத்திற்குரியது. வாக்கு வங்கிக்காக உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். பீகார் மாநிலத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் தான் இங்கு வந்து வேலை பார்த்து, பீகார் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

பெ.சண்முகம்(மார்க்சிஸ்ட்): பீகார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பீஹாரிகள் தாக்கப்படுவதாக பிரதமர் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். இனப்பகைமையை உருவாக்கும் இந்தப் பேச்சுக்கு வன்மையான கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் பிரதமர் பீகார் தொழிலாளர்களின் வேலை‌வாய்ப்பிலும், திங்கிற சோற்றிலும் மண் அள்ளி போடுகிறார் என்பதை அந்த தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): தமிழகத்தில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவமதிக்கபடுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியிருப்பது, முழுமையாக ஆதாரமற்றது. அரசியல் நோக்கம் உடையது. தமிழ்நாடு என்றென்றும் மொழி, மத, இன வேறுபாடு கடந்து, ஒற்றுமையுடன் வாழும் மண்ணாக திகழ்கிறது. உண்மையில், 2014ம் ஆண்டு முதல், நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஒன்றிய ஆட்சிக்கு வந்த பின்னர், வட மாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம், தமிழ்நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி கூறிய இந்த பொய்யான, பிரிவினையை ஊக்குவிக்கும் பேச்சை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கனிமொழி எம்பி (திமுக துணை பொதுச்செயலாளர்): வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின்போது யார் தங்களை நடக்கவிட்டு கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்து வருகிறார்.

ஜவாஹிருல்லா எம்எல்ஏ(மமக தலைவர்): பிரதமர் பொறுப்பு என்பது கண்ணியத்துக்கு உரியது. ஆனால் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற பிளவு அரசியலை பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் கருத்து அவரது முந்தைய வெறுப்பு பேச்சுகளைப் போல் ஆதாரமற்றது மட்டுமின்றி ஆழமான பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை என்பதில் ஐயமில்லை. பீகார் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அமைதியாக வேலை செய்கிறார்கள், மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்கிறார்கள். அவர்களை துன்புறுத்தலுக்கு ஆளானவர்களாக பிரதமர் சித்தரித்திருப்பது தமிழ்நாட்டில் அவர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. பிரதமர் தனது பதவிக்கான கண்ணியத்தையும் மாண்பையும் குறைத்து விட்டார். மோடியின் தமிழர் விரோதக் கருத்துகள் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்னவென்பதை எடப்பாடி பழனிசாமி விளக்குவாரா என்று கூறியுள்ளார்.

* இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்துவிடுகிறார்.

* இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை அவர் இழந்துவிடக் கூடாது.

* ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜவினர் தமிழர்களின் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement