மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.8.88 லட்சம் மதிப்பில் நிதி உதவி
*431 மனுக்கள் குவிந்தன
*ஊழல் ஒழிப்பு உறுதிமொழி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 431 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதா காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் காதுகேளாதோர் பிரிவில் கபடி போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் சார்ந்த ஆறுமுகம் என்பவர் குவைத் நாட்டில் இறந்ததையடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத்தொகை ரூ.4,88,411 அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சார்ந்த அஞ்சம்மாள் மின்னல் தாக்கி இறந்தமைக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஊழல் ஒழிப்பு வார உறுதிமொழியை வாசிக்க அனைத்து அலுவலர்களும் ஏற்றனர்.
கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (தேசிய நெடுஞ்சாலை) பவானி, வேலுமணி, சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் சௌமியா, உதவி ஆணையர் (கலால்) ரேணுகாதேவி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.