கலெக்டர் அலுவலகத்தில் தனியார் காடுகள் சட்ட விலக்கு கோரி திரண்ட மக்கள்
நாகர்கோவில் : தனியார் காடுகள் சட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு முழு விலக்கு வழங்க வேண்டும். கைவச நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு, அணைக்கட்டு புறம்போக்கு என கூறி பட்டா வழங்க மறுப்பதை கைவிட்டு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.
அரசு நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நில உரிமை, குடிமனை உரிமை, நில உரிமை பட்டா கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் நேற்று நடந்தது.
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் வருகை தந்து மனுக்கள் அளித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தனர்.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.