மகாளய அமாவாசையை முன்னிட்டு பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் மக்கள் குவிந்தனர்
தொண்டாமுத்தூர் : புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை பிறகு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமானது மகாளய அமாவாசையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மகாளய அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாடு நடத்துவதால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும் என இந்துக்கள் நம்புகின்றனர். காசிக்கு நிகராக பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் திதி கொடுப்பதை பொதுமக்கள் நினைப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நொய்யல் ஆற்றுக் கரைக்கு திதி கொடுக்க வந்தனர். இதையொட்டி பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.