ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலில் நீராடி திதி கொடுத்த மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷபன தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்து சாமி வழிபாடு செய்தனர்.
தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷான தீர்த்தம், ராமர் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்கி தீர்த்தமாடி அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயிலில் வழிபாடு செய்தனர்.
திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் நீராடி, கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டaனர். பிறகு அங்குள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாத பெருமாள் கோயில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து, அங்குள்ள பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். புனித கடற்கரைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், மாவட்டம் முழுதும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம், சேதுக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்திற்கும், முதுகுளத்தூரில் இருந்து மாரியூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் கிராமப்புற கோயில்களில் அமாவாசை விஷேச பூஜைகள், வழிபாடு நடந்தது.
திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் மற்றும் வராஹிஅம்மன் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மேலக்கடலாடி அருகே உள்ள நித்தியகல்யாணி உடனுரை வில்வநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் சோமேஸ்வரர் ஆகிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடந்தது.
ஏனாதி பூங்குளத்து அய்யனார், மாடன், ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி பாதாள காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், ராக்கச்சிஅம்மன். காணிக்கூர் பாதாளகாளியம்மன் உள்ளிட்ட மாவட்டத்திலுளள் கிராம கோயில்களில் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.