தேயிலை மூட்டை தூக்கும் தொழிலாளர்களின் கவனக்குறைவால் விபத்து அபாயம்: மக்கள் குற்றச்சாட்டு
குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து லாரிகள் மூலம் வெளி மாநிலங்கள் உட்பட பல்வேறு சமவெளி பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள தேயிலை தூள் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
அப்பகுதியில் தினமும் தேயிலை தூள் மூட்டைகளை ஏற்றும் லாரிகளால் அவ்வழியாக செல்லக்கூடிய டால்பின் நோஸ், லாம்ஸ்ராக் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் கவனக்குறைவால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தாழ்வான பகுதியில் தேயிலை மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி தானாக நகர்ந்து சென்று தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனிடையே தற்போது லாரியில் அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகள் மீது நின்ற தொழிலாளி ஒருவர் தன் மீது மின்கம்பிகள் உரசியது கூட தெரியாமல் சாகசம் செய்கிறார். அப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘அப்பகுதியில் அதிக பாரத்துடன் மூட்டைகளை ஏற்றுவதால் சில இடங்களில் லாரிகள் கவிழ்ந்து விடும் சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, மூட்டைகளை தூக்கும் போது தொழிலாளர்கள் கவனக்குறைவாக செயல்படுகின்றனர். மேலும், லாரியில் தேயிலை தூள் மூட்டைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சுமார் 30 அடி உயரத்திலிருந்து வீசுகின்றனர்.
இவ்வாறு வீசியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகில் நிறுத்திவைக்கப்பட்ட 2 கார்கள் சேதமானது. மேலும் அப்பகுதி சாலையின் எதிரே வரும் வாகன ஓட்டுநர்களிடம் லாரியில் லோடு ஏற்றுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
எனவே, மூட்டைகள் ஏற்றும் வரை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக மேல் குன்னூர் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தும் இதே நிலை தொடர்கிறது. எனவே, இவ்வாறு அலட்சியமாக செயல்படும் வேலையாட்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.