ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை களைய, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் அடுத்த மாதம் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.