பழைய ஓய்வூதியம் கோரிய வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் முதுகலை தெலுங்கு ஆசிரியர் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், 2003லிருந்தே அரசு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மட்டுமே என்று அரசாணை வெளியிட்டது. இவ்வாறு முன் தேதியிட்டு பணப் பலன்களை குறைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பணி நியமன நடைமுறைகள் 2003 ஆகஸ்ட் 6ம் தேதிக்கு முன்பே துவங்கி இருந்தால் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமே பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றமும் சுதாகர், கவிதா ஆகியோர் தொடர்ந்த வழக்கிலும் இதே தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்குகளை முன்னுதாரணமாக கொண்டு தனக்கும் பழைய ஓய்வூதிய திட்டமே பொருந்தும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி முடிவெடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
ஆனால் மனுதாரரின் மனுவை முறையாக விசாரணை செய்யாமல் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் நிராகரித்துள்ளார். எனவே, நீதிமன்ற உத்தரவை முறையாக பரிசீலனை செய்து பழைய ஓய்வூதியத்தினை வழங்காத துறைச் செயலாளர் சந்தரமோகனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், நிதித் துறை செயலாளர், அக்கவுண்ட் ஜெனரல் ஆகியோர் அக்டோபர் 10ம் தேதிக்குள் உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.