அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்: மரியா கொரினா
ஆஸ்லோ: 'எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்' என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறியுள்ளார்.
ஒஸ்லோ 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் பரிசை அமைதிக்கான நோபல் தேர்வுக் குழு அறிவித்தது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல் வாதியான மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 'நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்' என மரியா கொரினா மச்சாடோ கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
"அமைதிக்கான நோபல் பரிசு அனைத்து வெனிசுலா மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரம். இந்த விருதை வெனிசுலாவின் துக்கத்தில் இருக்கும் மக்களுக்கும், ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன். இது எனது அனைத்து வெனிசுலா மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
கூடுதலாக, எங்கள் பணியை முடித்து சுதந்திரத்தை அடைய நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். இன்று நாம் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். எப்போதையும் விட, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடைவதில் எங்கள் முக்கிய கூட்டாளிகளாக ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகளை நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.