அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசாவில் ஒரே நாளில் 63 பேர் பலி: இஸ்ரேல் தாக்குதலால் பரபரப்பு
கெய்ரோ: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் இரண்டாம் ஆண்டை நெருங்கும் நிலையில், காசாவில் இதுவரை 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் ஓரளவு பின்வாங்கினாலும், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழலில், நிரந்தரப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா முன்னெடுத்த திட்டத்தின் அடிப்படையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று முன்தினம் முதல் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக, ஹமாஸ் பிடியில் உள்ள 48 இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருந்தாலும், நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ‘ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்கிறது. நேற்று மட்டும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், பொதுமக்கள் மற்றும் நிவாரண உதவிக்காகக் காத்திருந்தவர்கள் உட்பட 63 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.