மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக ஒன்றிய அரசுடன் குகி, ஸோ இன குழுக்கள் ஒப்பந்தம்: தேசிய நெடுஞ்சாலையை திறந்து விட சம்மதம்
புதுடெல்லி: மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக குகி, ஸோ இன குழுக்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலை எண் 2 ஐ திறப்பதற்கு இரண்டு குழுக்களும் ஒப்பு கொண்டுள்ளன. வடக்கிழக்கு மாநிலம், மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 260 பேர் பலியாகினர். 1000 பேர் காயமடைந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து வெளி மாநிலத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
2023ல் வெடித்த கலவரம் பல மாதங்கள் வரை நீடித்தன. பின்னர் அமைதி ஏற்பட்ட போதிலும் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை நீடித்து பதற்றம் ஏற்பட்டு வந்ததால்,முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவியை கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதன் பின் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பிரதமர் மோடி இந்த மாதம் மணிப்பூருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 13 மற்றும்14ம் தேதிகளில் அசாம், மிசோரம் மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பிரதமர், மணிப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் பிரதமர் மணிப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படும் நிலையில், மாநிலத்தின் முக்கிய இனக்குழுக்களான குகி தேசிய அமைப்பு(கேஎன்ஓ) மற்றும் ஸோ இன குழுவின் ஐக்கிய மக்கள் முன்னணி(ஐபிஎப்) ஆகியவை ஒன்றிய அரசுடன் புதிய ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளன.
அதில் அனைத்து தரப்பினரும் மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணவும், தேசிய நெடுஞ்சாலை எண்-2 ஐ சுதந்திரமான இயக்கத்திற்காகத் திறக்கவும், போராளிகளின் முகாம்களை இடமாற்றம் செய்யவும் ஒப்புக்கொண்டனர். மேலும் ஒன்றிய எல்லை பாதுகாப்பு படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை திறப்பது பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்வதற்கு வழி வகுக்கும். அமைதியை உறுதிப்படுத்த பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பணியாறுவற்றுதாக குகி- ஸோ அமைப்புகள் உறுதியளித்துள்ளன.
உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,‘‘குகி,ஸோ குழுக்களின் பிரதிநிதிகள், பல நாட்களாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளை ெதாடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டு குழுக்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மணிப்பூரின் அமைதி நடவடிக்கையில் முக்கிய திருப்பம் ’’ என்றனர்.