அமைதியில் இருந்து ஆக்ரோஷத்துக்கு மாறியது சாலையோர கடையப்பா நொறுக்குது ‘படையப்பா’
*மூணாறு எஸ்டேட் மக்கள் அச்சம்
மூணாறு : மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரியும் படையப்பா யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டுயானைகளில் ஒன்றான படையப்பா, சமீப காலமாக சாலையில் நின்று போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவது, சுற்றுலா மையங்களில் சாலையோர கடைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மாட்டுப்பட்டி படகு சவாரி மையம் அருகே சாலையோரம் இருந்த இரண்டு கடைகளை உடைத்த படையப்பா யானை, பழம், மக்காச்சோளம் ஆகியவற்றை தின்று தீர்த்தது. அருகில் உள்ள நெற்றிமேடு எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள தோட்டங்களில் இருந்த பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டர் பீன்ஸ் போன்றவற்றை சேதப்படுத்தியது.லாக்காடு எஸ்டேட்டில் நுழைந்த காட்டுயானை, நான்கு சாலையோர கடைகளை சேதப்படுத்தியது.
மாட்டுப்பட்டி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிவதால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் நடமாடுகின்றனர். முன்பு அமைதியான சுபாவத்துடன் இருந்த படையப்பா யானை, தற்போது அவ்வப்போது ஆக்ரோஷ தன்மையைக் காட்டுவது, எஸ்டேட் தொழிலாளர் குடும்பங்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.