8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்: வருகிற 19ம் தேதி ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
புதுடெல்லி: 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்குமாறு வலியுறுத்தி ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 19ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உடனடியாக 8வது ஊதியக்குழுவை அமைக்குமாறும், தசரா விழாவிற்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ரயில்வே கூட்டமைப்புகள் சார்பில் வருகிற 19ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘‘ரயில்வே தொழிலாளர்கள் உட்பட ஒன்றிய அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதால் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.