கோயம்பேட்டில் பொதுமக்களின் 2 கிலோ நகைகளை விற்று செலவு செய்த வழக்கில் மற்றொரு அடகுக்கடைக்காரர் கைது
அண்ணாநகர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கெகன் ராம் (55). இவர், கோயம்பேட்டில் அடகு கடை நடத்தி வந்தார். உடல் நலம் சரியில்லாததால் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு கெகன் ராம் இறந்தார். இதையடுத்து அவரது மகன் சுனில் (25), அடகு கடையை நடத்தி வந்தார். இவரிடம் பலர் நகைகளை அடகு வைத்தனர். திடீரென கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுனில் மாயமானார்.
பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயம்பேடு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, கடந்த 3ம் தேதி சுனிலை கோயம்பேட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், சுனிலுக்கு மது பழக்கம் இருந்ததும், அதனால் ரூ.1.50 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க நகைகளை கொஞ்ச கொஞ்சமாக அதே பகுதியை சேர்ந்த அடகுக்கடை உரிமையாளர் அசோக் (35) என்பவரிடம் விற்றதும், அந்த பணத்தில் நண்பர்களுடன் சொகுசு காரில் ஜாலியாக வலம் வந்ததாகவும், மீதமுள்ள 200 கிராம் நகைகளை வங்கியில் வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, அசோக்கின் செல்போனை போலீசார் தொடர்பு கொண்டு, விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்தனர். அவரும், சரியென கூறினார். பின்னர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. பின்னர் நேற்று கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு அசோக் வந்தார். அங்கு சுனில் இருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அசோக்கிடம் நடத்திய விசாரணையில், நகைகளை வாங்கவில்லை என்றார்.
இதையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், 1 கிலோ தங்கம் மட்டும் வாங்கி கொண்டு ரூ.55 லட்சம் கொடுத்தேன் என்று அசோக் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில், விசாரணை முடிந்ததும் இன்று மாலை புழல் சிறையில் மீண்டும் சுனில் அடைக்கப்படுவார்.