பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள விநாயகர் சிலை கழிவுகள்: குப்பைகளை அகற்றும் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்
சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா என்பது கடந்த 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அங்கங்கே வைக்கப்பட்ட சிலைகள் நீர் நிலையங்களில் கரைக்க கூடிய நிகழ்வு நடைபெற்றது. சென்னை பொறுத்தவரையில் நேற்று பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை, திருவான்மியூர் பல்கலைக்கழகம் நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் குப்பம் கடற்கரை என நான்கு இடங்களில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாநகர் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரையில் மட்டும் 1,164 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்றைய தினம் கரைக்கப்பட்ட சிலைகளுடன் மீதம் இருக்கக்கூடிய குப்பைகள் தொடர்ச்சியாக மணல் தளத்தில் போடப்பட்டு இருந்தது. இந்த குப்பைகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நேற்றிரவு வரை 40 டன் குப்பைகளை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிலைகளில் போடப்பட்டு இருந்த பூ, மாலை, மரக்கட்டைகள், இரும்பு சட்டகங்கள் அதேபோல மரத்தின் சட்டகங்கள் என அனைத்து பொருட்களை உடனடியாக அகற்றும் பணியில் இன்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று பிற்பகலுக்குள் கடற்கரை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் முழுவதுமாக அகற்றப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்றிரவு முதல் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் பணிகள் முடிந்து எவ்வளவு குப்பைகள் அகற்றப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.