செங்கல்பட்டு அருகே கொட்டும் மழையில் 2 மணி நேரம் பயணிகள் ரயில் மறியல் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்றிரவு மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து, கொட்டும் மழையில் 2 மணி நேரத்துக்கு மேல் ரயில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் வழியாக அரக்கோணம் வரை நாள்தோறும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் கிளம்பியது. அப்போது எதிர்திசையில் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதனால் செங்கல்பட்டு அருகே பாலூர் ரயில் நிலையத்தில் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரமாகியும் மீண்டும் மின்சார ரயில் இயக்கப்படவில்லை.
இதனால், ரயிலில் இருந்த பயணிகள் ஆத்திரமாகி, கொட்டும் மழையில் மும்பையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயிலின் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் கடந்த ஒரு மாத காலமாக இதேபோல்தான் ரயில் தாமதம் நடந்து வருகிறது. இதேபோல் நாள்தோறும் நடுவழியில் மின்சார ரயிலை நிறுத்தினால், நாங்கள் எப்படி குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கோ அல்லது வீட்டுக்கோ செல்ல முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அதிகாரிகளின் உறுதியை ஏற்று ரயில் பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், அந்த மார்க்கத்தில் ரயில் சேவை துவங்கியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.