பயணிகளுக்கு சவால் விடும் ரயில்வே நிர்வாகம்: ரயில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்ய முடியாத 3.27 கோடி மக்கள்: ரயில்வேயில் அதிகரிக்கும் பிரச்னை
ரயில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்ய முடியாமல் 3.27 கோடி மக்கள் பயணங்களை தவிர்த்துள்ளனர். இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்று. ஒவ்வொரு நாளும் 2.3 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இது, உலகின் எந்த நாட்டின் ரயில்வேயையும் விட அதிகம். 67,000 கிலோ மீட்டர் பாதை நெட்வொர்க் மற்றும் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களுடன், இந்திய ரயில்வே நம் நாட்டின் உயிர்நாடியாக விளங்குகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ரயில்வே நம் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே பாலமாக, ஏழை-பணக்காரன் பேதமின்றி அனைவரையும் ஒரே தளத்தில் பயணிக்க வைத்து, ”ஏகத்தில் அனேகம்” என்ற இந்தியாவின் குணத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக இருந்து வருகிறது. ஆனால், இன்று அந்த பெருமைக்குரிய ரயில்வே மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 2024-25ம் நிதியாண்டில் மட்டும் 3.27 கோடி பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணம் செய்ய முடியாமல் போனது. அவர்களுடைய டிக்கெட்டுகள் கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரயில் பயணம் மற்ற போக்குவரத்து சாதனங்களை விட மலிவானது என்பதால் மக்கள் ரயிலையே தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணத்துக்கான தேவை வானளவு உயர்ந்துள்ளது. ஆனால், இருக்கைகளின் எண்ணிக்கை அதற்கேற்ப அதிகரிக்கவில்லை. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகையும், பொருளாதார வளர்ச்சியும் ரயில் பயணத்தின் தேவையை கூட்டியுள்ளது.
இதனால், அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள் - மருத்துவ அவசரநிலை, வேலை, கல்வி போன்ற காரணங்களுக்காக பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக, சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி,
நெல்லை போன்ற ஊர்களுக்கு விமானம் மூலம் செல்ல ரூ.8,000-15,000ம் வரையும்,பேருந்து மூலம் செல்ல ரூ.1,500-4,500 வரையும், ரயிலில் செல்ல ரூ.600-3,000 வரையும் செலவாகிறது. இதில் ரயில்வே குறைந்த கட்டணத்தில் பயணத்தை வழங்குகிறது. குறைந்த கட்டணத்தில் பயணிப்பது யார்.? சாமானியர்கள் தான். அவர்களால் நிம்மதியாக கூட பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்படுள்ளது. பயணிகள் புக் செய்தும் சீட் கிடைக்கவில்லை என்பது மன உளச்சலையும் ஏற்படுத்தும்.
ஆண்டு வாரியான புள்ளிவிவரங்கள்
* 2021-22 1.65 கோடி பயணிகள்
* 2022-23 2.72 கோடி பயணிகள்
* 2023-24 2.96 கோடி பயணிகள்
* 2024-25 3.27 கோடி பயணிகள்
ரயில் பயணத்துக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது, ஆனால் உறுதி செய்யப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ரயில்வே நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்க வேலைகள் செய்தும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தடுக்க 2.5 கோடி போலி மற்றும் சந்தேகத்துக்குரிய யூசர் ஐடிகளை ரத்து செய்துள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் நிலையை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாகவே தெரிந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது (முன்பு 4 மணி நேரம் மட்டுமே இருந்தது). இந்த நடவடிக்கைகள் ஓரளவு நிவாரணம் அளித்தாலும், கோடிக்கணக்கான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காத பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த புள்ளிவிவரங்கள் இந்திய ரயில்வே எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலை உணர்த்துகின்றன.
ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி 2030க்கு முன் இந்த பிரச்னையை 80 சதவீதம் குறைப்பதே இலக்காக உள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் கோடி முதலீடு, புதிய 25,000 கிமீ ரயில் பாதைகள், 100 புதிய அதிவேக ரயில்கள் என திட்டமிட்டு வருகிறது. மக்கள்தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வெறும் உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமே போதாது. டிக்கெட் விநியோக முறையையும் ரயில்வே நிர்வாகம் மாற்ற வேண்டும்.
இந்திய ரயில்வே நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்க பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், மக்களின் தேவையை பூர்த்தி செய்வது இன்னும் தொலைவில் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை நம்பியிருக்கும் நாட்டில், இந்த பிரச்னைக்கு விரைவான மற்றும் நிரந்தர தீர்வு காண்பது மிக அவசியம். இல்லையென்றால், இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
* உலக நாடுகளின் அனுபவம்
ஜப்பான்: அதிவேக ரயில்கள் டைனமிக் ப்ரைசிங்
சிங்கப்பூர்: ஏஐ அடிப்படையிலான டிக்கெட் ஒதுக்கீடு
சுவிட்சர்லாந்து: சிறிய தூரத்துக்கு அதிக ரயில்கள்