பாஸ்புக் தகவல்கள் உட்பட அனைத்து பிஎப் சேவைகளையும் ஒரே இணையதளத்தில் பெறலாம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) திட்டத்தில், நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது உறுப்பினர்கள் தங்கள் பிஎப் கணக்கில் சேர்க்கப்படும் நிதி பங்களிப்புகள், முன்பணம் அல்லது பணத்தை எடுத்தல் தொடர்பான பரிவர்த்தனைகளை சரிபார்க்க இபிஎப்ஓவின் பாஸ்புக் இணையதளத்தை பார்க்க வேண்டும்.
பணம் எடுத்தல், பிஎப் கணக்கில் பாஸ்வேர்டு மாற்றம் போன்ற சேவைகளை பெற பிஎப் உறுப்பினர் இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) உள்நுழைய வேண்டும். இனி உறுப்பினர் இணையதளத்திலேயே பாஸ்புக் சேவையையும் பெற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ‘பாஸ்புக் லைட்’ என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் பாஸ்புக் மற்றும் பங்களிப்புகள், எடுக்கப்பட்ட பணம், இருப்பு தொகை ஆகிய விவரங்களை சுருக்கமாக பார்க்க முடியும்.
ஒரே லாகின் மூலமாக பாஸ்புக் அணுகல் உள்ளிட்ட அனைத்து முக்கிய சேவைகளையும் வழங்குவது பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், விரிவான பாஸ்புக் தகவல்களை பார்க்க ஏற்கனவே உள்ள பாஸ்புக் இணையதளத்தை தொடர்ந்து அணுகலாம். இது தவிர, ஊழியர்கள் பணிமாறும் போது பிஎப் கணக்கை புதிய நிறுவனத்துடன் இணைப்பதற்கான பரிமாற்ற சான்றிதழை ஆன்லைனில் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வேலை மாறும் போது அவர்களின் பிஎப் கணக்குகள் படிவம் 13 மூலம் புதிய நிறுவனத்திற்கான பிஎப் அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு பிறகு முந்தைய பிஎப் அலுவலகத்தால் இணைப்பு கே எனும் பரிமாற்ற சான்றிதழ் புதிய பிஎப் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இதுவரை இணைப்பு கே சான்றிதழ் பிஎப் அலுவலகங்களுக்கு இடையே மட்டும் பகிரப்பட்டு வந்தது. இனி இந்த சான்றிதழ் உறுப்பினர் இணையதளத்தில் இருந்து பிடிஎப் ஆவணமாக உறுப்பினர்களே நேரடியாக பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.