பாசனநீரை பரிசோதிப்பது அவசியம்!
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. இந்த பூமியில் அவதரிக்கும் எந்த ஓர் உயிரினமாக இருந்தாலும், அவற்றின் உடல் எடையில் 80 சதவீதம் நீராலேயே அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த உயிர்கள் திறம்பட வளர்ந்து ஆரோக்கியமாக வாழ தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிந்து கொள்ளலாம். ஒரு பயிருக்கு பாய்ச்சப்படும் நீரானது நிலத்தில் பாய்ந்து ஓடி, மண்ணில் உள்ள கரையக்கூடிய சத்துக்களை கரையச்செய்து, பயிரின் வேர்களை அடைகிறது. அவ்வாறு நீருடன் வரும் சத்துகளை உறிஞ்சும் வேரானது, பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு உதவிபுரிகிறது. பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரில் கலந்திருக்கும் ரசாயன பொருட்களைப் பொறுத்து அவை பாசனத்திற்கு உகந்ததா? இல்லையா? என முடிவெடுப்பது அவசியம். பாசன நீர் பயிர்களுக்கு உகந்ததா? என உறுதி செய்த பிறகு நாம் பயிர்களுக்கு பயன்படுத்துவதுதான் சிறந்த முறை. இல்லையென்றால் மண்ணுக்கு அவை கேடு விளைவித்துவிடும்.
தண்ணீரில் கலந்து இருக்கும் ரசாயனப் பொருட்களைப் பொறுத்து அதன் கார அமில நிலை, உப்பின் நிலை மாறுபடும். மழைநீர் எப்போதும் சற்று அமில நிலையில் இருக்கும். உப்புச்சத்துக்கள் பொதுவாக அதில் இருக்காது. குறைந்த அளவில் தழைச்சத்தும், மிக மிகக் குறைந்த அளவில் கால்சியம், மெக்னீசியம், சோடியம் கலந்து இருக்கும். மழைநீர் மிகவும் தூய்மையானது. மழைநீரானது வானிலிருந்து வரும்போது தழைச்சத்தோடு வந்து, பெய்த பின் அமில நிலைக்கு மாறுகிறது. இது மண்ணுடன் கலந்து, மண்ணில் உள்ள சத்துக்களை கரைக்கச்செய்து, சத்துமிக்கதாக ஆக்கும். அந்த நீரை வேர் உறிஞ்சிக் கொள்வதால் பயிர்கள் செழித்து வளரும். இதனாலேயே மழைக்குப் பிறகு பயிர் பச்சைப் பசேலென அழகாகத் தெரியும். இவ்விதம் மழைநீர் தூய்மையானதாக இருந்தாலும் அது பெய்து மண்ணுடன் கலந்து அதிலுள்ள கரையக்கூடிய உப்புக்களை எல்லாம் கரைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு மேடான மலைப்பிரதேசங்களில் இருந்து பள்ளத்தை நோக்கி ஆறு மற்றும் கால்வாய் வழியாக பாய்ந்து, குளம் குட்டைகளை நிரப்பியும் கடைசியாக சமுத்திரத்தை சென்றடைகிறது.
ஆறு, கால்வாய் என செல்லும் பல்வேறு நீர் பாதைகளில் இருந்தும், ஆங்காங்கே பல கிராமங்களில் மழைநீரால் நிரப்பப்பட்ட பல்வேறு குளங்களில் இருந்தும் விவசாய பெருமக்களால், தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்ட பல்வேறு பயிர்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் அந்த நீரில் கலந்து இருக்கும் உப்பின் அளவு, கார அமில நிலை இடத்திற்கு இடம் மாறுபடும். மழைப்பொழிவு பிரதேசத்தில் இருந்து, ஓடும் கால்வாய் முதல் கடலில் சென்று கலக்கும் வரை ஒவ்வொரு இடத்திலும் இந்த மாறுபாடு இருக்கும். உதாரணமாக மழை பொழியும் மலைப் பிரதேசத்தில் இருந்து தண்ணீரை எடுத்து சுவைப்பதற்கும், அதே நீரை கடலில் கலக்கும் முன் எடுத்து குடித்துப் பார்ப்பதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது அல்லவா? மேலும் இந்த இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் அதே நீரை எடுத்து சுவைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். அதற்குக் காரணம் நீரானது அது ஓடும் நிலப்பரப்பில் உள்ள உப்புக்களை சிறிது சிறிதாக கரைத்துக்கொண்டு தன்னுள் கொண்டு செல்வதுதான். இதுபோன்று அதிகளவு உப்பு கொண்ட நீரை பயிர்களுக்கு பாய்ச்சினால் அதன் மூலம் நல்ல நிலமும் பாழ்படும். ஆதலால் இதுபோன்ற தண்ணீரை பாசனத்துக்கு என்று பயன்படுத்தும் முன் அதில் கலந்து இருக்கும் உப்பின் அளவை கண்டறிந்து அதன் பின்னர் பயன்படுத்துவதே சிறந்தது.
கிணறு தோண்டி பாசனத்திற்கு தண்ணீர் எடுப்பது அதிக செலவு பிடிக்கும் என்பதால் இப்போதெல்லாம் கிணறு தோண்டுவதற்குப் பதிலாக ஆழ்துளை கிணறு தோண்டுகிறார்கள். இதில் கரிசல் மண் நிலத்தை விட செம்மண் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினால் சுவையான தண்ணீர் கிடைக்கும் என்பது பொதுவான கருத்து. அதுபோல காலம் காலமாக மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வரும் கோவில்பட்டி போன்ற கரிசல் பூமியில் ஆழ்துளை கிணறு தோண்டி அதிக அளவில் உப்புக்கள் உள்ள அந்நீரைக் கொண்டு பாசனம் செய்தால் மண் கெட்டுப்போய்விடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் ஆழ்துளை கிணறு மூலம் பெறப்பட்ட நீரை பாசனத்திற்கு உகந்ததுதானா? என பரிசோதனை செய்து அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும். கோவில்பட்டி போன்ற கரிசல் பூமி மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிறைந்திருக்கும் தண்ணீரைப் பரிசோதித்து பயன்படுத்துவதே சிறந்த முறை.
- ம.மகேஸ்வரன்,வேளாண்மை அலுவலர், திருநெல்வேலி.