கட்சி அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டுவிட்டு டெல்லியில் முகாமிட்டிருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘புதிய நெருக்கடியால் ரெஸ்டோ உரிமையாளர்கள் மீண்டும் முணுமுணுப்பில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர சலுகைகள் தாராளமாம்.. அரசும் இதற்கான அனைத்து கதவுகளையும் திறந்து விட்டுள்ளதாம்.. ஆனால் சமீபத்தில் ரெஸ்டோ பாரில் நடந்த தமிழக இளைஞர் படுகொலைக்குப் பின் மாவட்ட நிர்வாகியின் நெருக்கடி அதிகமாகி இருக்குதாம்.. முதல்கட்டமாக ரெய்டு நடத்தி ரெஸ்டோ பார்களுக்கு போடப்பட்ட அனைத்து தடைகளையும் ஒருவழியாக புல்லட்சாமி தரப்பு தகர்த்து விட்டதாம்.. இதனால் மீண்டும் ரெஸ்டோ பார்கள் களை கட்ட தொடங்கிய நிலையில் புதிய நெருக்கடி வந்துள்ளதாம்.. ரெஸ்டோ பார்களில் டிஜே, ஆட்டம்- பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இனிமேல் வரி செலுத்தியாக வேண்டுமென தடாலடி உத்தரவு பறந்துள்ளதாம்.. நகராட்சியின் உரிமம் பெறாமல் கேளிக்கைகளை நடத்தினால் வணிக உரிமமே இனி ரத்தாகும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டு இருக்காம்.. இதனால் ரெஸ்டோ உரிமையாளர்கள் மீண்டும் முணுமுணுக்க தொடங்கியிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியை மீட்க முடியாமல் நட்டாத்தில் நிற்கும் தேனிக்காரர் மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் வடக்கு மாவட்ட செயலாளராக மாஜி நகராட்சி தலைவர் இருந்து வருகிறார். இதேபோல் தெற்கு மாவட்ட செயலாளராக மாஜி எம்எல்ஏ இருக்கிறார். இலை கட்சியில் இருந்து தேனிக்காரர் வெளியேறிய போது இருவருமே தேனிக்காரர் அணி பக்கம் வந்தனர். இலை கட்சியை எப்படியாவது மீட்டு எடுப்பார், தங்களுக்கென்று அங்கீகாரத்தை எப்படியாவது பெற்று தருவார் என தேனிக்காரர் மீது நம்பிக்கையில் இருந்து வந்தார்களாம்.. ஆனால் அதற்கான திரைமறைவான வேலைகளையும் இந்த இரண்டு நிர்வாகிகள் செய்து வந்தாங்களாம்.. ஆனால் கடைசி வரையிலும் இலை கட்சியை தேனிக்காரரால் மீட்க முடிய வில்லை. மலராத கட்சியை நம்பி சென்று தற்போது நட்டாத்தில் இருந்து வருகிறார்.. இதனால் தேனிக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்... தேனிக்காரரை நம்பி வந்ததற்கு நம்மை நட்டாத்தில் விட்டு விட்டாரே என அவர்களது நெருங்கிய நண்பர்களிடமும் நிர்வாகிகள் புலம்பி வருகின்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மப்டியில் அதிரடி காட்டும் சிபிஐயால் பீதியில் அரசுத்துறைகள் இருக்காமே..” எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாறி விட்டதாம் புதுச்சேரி. புதுசு புதுசா ஐபிஎஸ்க்கள் வந்தாலும் குற்றங்கள், லஞ்சங்கள் குறைந்தபாடில்லையாம்.. விநோதமான சைபர் புகார்கள் அதிகரிக்க, மறுபுறமோ கொலைகளால் உள்ளூர் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்களாம்.. காக்கியின் நிலைமை இப்படியிருக்க, மலரைாத கட்சி கூட்டணி அரசின் அதிகாரிகளோ அவ்வப்போது லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் சிபிஐ வசம் கையும் களவுமாக சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறதாம்.. ஏற்கனவே பத்திரபதிவு, பொதுப்பணி, சுற்றுலா அதிகாரிகள் சிக்கியுள்ள நிலையில் தற்போது தொழிலாளர் துறையும் புதிதாக சேர்ந்துள்ளதாம்.. அதாவது பிறமாநில கம்பெனிக்கு ஆதரவாக செயல்பட ப விட்டமின் பெற்ற உதவி அதிகாரி சிக்கிய நிலையில், புரோக்கரும் பிடிபட்டுள்ளாராம்.. பஜ்ஜி தின்னு நோட்டமிட்டு சிபிஐ அதிரடி காட்டிய விவகாரம் வெளியே கசிய, மற்ற துறைகளும் ஆடிப்போய் இருக்கிறார்களாம்.. இதனால் யார், யார் எந்தெந்த ரூபத்தில் உலாவுகிறார்களோ என்ற “திக் திக்” மனநிலையில் அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டுவிட்டு மாஜி அமைச்சர் டெல்லியில் முகாமிட்டிருக்கிறாராமே.. என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் வடமாவட்டங்களின் தலைவர் நான்தான் என்று காட்டிக்கொள்ளும் புரம் என்று முடியும் மாவட்டத்தில் உள்ள மாஜி அமைச்சர் வேறு யாரையும் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கவிடாமல் சேலத்துக்காரரை மிரட்டி வருகிறாராம்.. பல மாவட்டங்களில் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பிரித்தபோதும் இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிக்கும் நான்தான் மாவட்ட செயலாளர், வேறு யாரும் கிடையாது என்று ஜெ. பானியில் நிரந்தர மாவட்ட செயலாளர் என்ற பதவியை மாஜி அமைச்சர் தக்க வைத்திருக்கிறாராம்.. சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பின்னர் தனது தந்திரத்தால் ராஜ்யசபா எம்பியான இவர் தற்போது இந்த பக்கமே தலைகாட்டுவதில்லையாம்.. டெல்லியிலேயே முகாமிட்டு மலராத கட்சியின் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திப்பது என்று அங்கேயே செட்டிலாகி விட்டாராம்.. இங்குள்ள கட்சி அலுவலகத்தைகூட திறக்கக்கூடாது, நான் வந்தால்தான் திறக்கணும் அதுவரை பூட்டியே கிடக்கணும் என்ற மாஜி அமைச்சர் உத்தரவால் பல மாதங்களாக கட்சி ஆபீசு பூட்டியே கிடக்குதாம்.. இந்த மாவட்டத்தில் இலைகட்சிக்கு 2 எம்எல்ஏ, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் இருந்தாலும் கட்சி ஆபீச திறந்து உள்ளே போகக்கூடாதென்ற உத்தரவால் தேர்தல் நெருங்கும் நிலையில் இலைகட்சி ஆபிசு பூட்டிக்கிடக்கும் விவகாரம் சேலத்துக்காரர் காதுக்கும் போய் சேர்க்கப்பட்டிருக்காம்.. மாஜி அமைச்சர் இருந்தால்தான் கட்சி ஆபிசு இருக்கும், அவர் இல்லைன்னா கிடையாதா என்ற ஆதங்கத்தில் விரைவில் இதற்கான முடிவெடுப்பதாக தலைமை நிர்வாகிகளிடம் அவர் உறுதியளித்திருக்கிறாராம்.. கட்சி ஆபிசு சாவி சேலத்துக்காரர் ஆதரவாளரிடம் போகுமா அல்லது மாவட்ட செயலாளர் எண்ணிக்கை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்ப எழுந்திருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.