கட்சி கொடி, மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு அன்புமணிதான் பாமக தலைவர் தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி
சென்னை: அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு கூறினார். பாமகவில் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக ராமதாஸ் - அன்புமணி இடையே நடந்து வந்த மோதல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ராமதாஸ் அண்மையில் உத்தரவிட்டார். எனினும், அன்புமணியை தான் தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அங்கீகரித்துள்ளதாகவும், தலைவரை யாராலும் நீக்க முடியாது எனவும் அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், கடிதமும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை அடிப்படையாக கொண்டு, பாமக தலைவராக அன்புமணியை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு, சென்னை தி.நகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி பாமக தலைவராக தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின் போது ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அன்புமணி கையொப்பமிட்ட படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும். மாம்பழ சின்னமும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு வழங்கப்பட்டு விட்டது. பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா, நிறுவனராக ராமதாஸ் ஆகியோரே தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பாமகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும். அன்புமணி தலைமையேற்பதை ஏற்காதவர்கள் சின்னம், கொடியைப் பயன்படுத்தக் கூடாது. இதுவரை விலகிச் சென்றவர்களும் மீண்டும் இணைந்து பாமகவை வலுப்படுத்த வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து பாமகவை ஆட்சிக்கு கொண்டு செல்வதே குறிக்கோள். பாமக நிறுவனர் ராமதாஸ்தான். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பாமக ஆட்சியில் அமர வேண்டும் என்ற இரண்டு லட்சியங்களை அடைய வேண்டிய பயணம்தான் இது. ராமதாசை நிறுவனராக கொண்டு தான் இந்த பயணத்தை தொடங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு அனுப்பிய அங்கீகார கடிதத்தையும் அவர் நிருபர்களிடம் காண்பித்தார்.