கட்சி பெயரைக்கூட களவாடி வைத்துள்ளார்: மல்லை சத்யாவை சாடிய துரை வைகோ
அரியலூர்: அரியலூரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று அளித்த பேட்டி: நெல்லுக்கான ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையாக ஒன்றிய அரசு பார்க்க வேண்டும். இதில், அரசியல் பார்க்கக் கூடாது. எஸ்ஐஆர் மூலமே பீகாரில் வெற்றி பெற்றதாக அதிமுக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். எஸ்ஐஆரில் தவறு செய்து தான் பீகாரில் வெற்றி பெற்றதை அதிமுகவினர் ஒத்துக்கொள்கிறார்களா?. அதேபோல் தமிழ்நாட்டில் தகுதியான வாக்காளர்களை நீக்கிவிட்டு தகுதி இல்லாத வாக்காளர்களை சேர்த்து நாம் வெற்றி பெறுவோம் என அதிமுக தலைமை நினைக்கிறதா?. இவ்வாறு அவர் கூறினார்.
மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் பெயர் மற்றொரு நபர் பதிவு செய்த கட்சி பெயர் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரைக்கும் திருட்டு பழக்கம் இருக்கத்தான் செய்யும். கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பெயரைக்கூட எனக்கு பேச பிடிக்காது” என்று துரை வைகோ கூறினார்.